May 5, 2012


திருப்புகலூர்

பண் – நட்டபாடை

திருச்சிற்றம்பலம்
குறிகலந்தஇசை பாடலினான்நசை யாலிவ்வுல கெல்லாம்
நெறிகலந்ததொரு நீர்மையனாயெரு தேறும்பலி பேணி
முறிகலந்ததொரு தோலரைமேலுடை யானிடம்மொய்ம் மலரின்
பொறிகலந்தபொழில் சூழ்ந்தயலேபுய லாரும்புக லூரே.
காதிலங்குகுழை யன்னிழைசேர்திரு மார்பன்னொரு பாகம்
மாதிலங்குதிரு மேனியினான்கரு மானின்னுரி யாடை
மீதிலங்கவணிந் தானிமையோர்தொழ மேவும்மிடஞ் சோலைப்
போதிலங்குநசை யால்வரிவண்டிசை பாடும்புக லூரே.
பண்ணிலாவுமறை பாடலினானிறை சேரும்வளை யங்கைப்
பெண்ணிலாவவுடை யான்பெரியார்கழ லென்றுந்தொழு தேத்த
உண்ணிலாவியவர் சிந்தையுள்நீங்கா வொருவற்கிட மென்பர்
மண்ணிலாவும்அடி யார்குடிமைத்தொழில் மல்கும்புக லூரே.
நீரின்மல்குசடை யன்விடையன்னடை யார்தம்அரண் மூன்றுஞ்
சீரின்மல்குமலை யேசிலையாக முனிந்தன்றுல குய்யக்(*)
காரின்மல்குகடல் நஞ்சமதுண்ட கடவுள்ளிட மென்பர்
ஊரின்மல்கிவளர் செம்மையினாலுயர் வெய்தும்புக லூரே.
(*) முனிந்தானுலகுய்ய என்றும் பாடம்.
செய்யமேனிவெளி யபொடிப்பூசுவர் சேரும்மடி யார்மேல்
பையநின்றவினை பாற்றுவர்போற்றிசைத் தென்றும்பணி வாரை
மெய்யநின்றபெரு மானுறையும்மிட மென்பரருள் பேணிப்
பொய்யிலாதமனத் தார்பிரியாதுபொ ருந்தும்புக லூரே.
கழலினோசைசிலம் பின்னொலியோசை கலிக்கப்பயில் கானிற்
குழலினோசைகுறட் பாரிடம்போற்றக் குனித்தாரிட மென்பர்
விழவினோசையடி யார்மிடைவுற்று விரும்பிப்பொலிந் தெங்கும்
முழவினோசைமுந் நீரயர்வெய்த முழங்கும்புக லூரே.
வெள்ளமார்ந்துமிளிர் செஞ்சடைதன்மேல் விளங்கும்மதி சூடி
உள்ளமார்ந்தஅடி யார்தொழுதேத்த உகக்கும்அருள் தந்தெங்
கள்ளமார்ந்துகழி யப்பழிதீர்த்த கடவுட்கிட மென்பர்
புள்ளையார்ந்தவய லின்விளைவால்வளம் மல்கும்புக லூரே.
தென்னிலங்கையரை யன்வரைபற்றி யெடுத்தான்முடி திண்டோ ள்
தன்னிலங்குவிர லால்நெரிவித்திசை கேட்டன்றருள் செய்த
மின்னிலங்குசடை யான்மடமாதொடு மேவும்மிட மென்பர்
பொன்னிலங்குமணி மாளிகைமேல்மதி தோயும்புக லூரே.
நாகம்வைத்தமுடி யானடிகைதொழு தேத்தும்மடி யார்கள்
ஆகம்வைத்தபெரு மான்பிரமன்னொடு மாலுந்தொழு தேத்த
ஏகம்வைத்தஎரி யாய்மிகவோங்கிய எம்மானிடம் போலும்
போகம்வைத்தபொழி லின்நிழலான்மது வாரும்புக லூரே.
செய்தவத்தர்மிகு தேரர்கள்சாக்கியர் செப்பிற்பொரு ளல்லாக்
கைதவத்தர்மொழி யைத்தவிர்வார்கள் கடவுள்ளிடம் போலுங்
கொய்துபத்தர்மல ரும்புனலுங்கொடு தூவித்துதி செய்து
மெய்தவத்தின்முயல் வாருயர்வானக மெய்தும்புக லூரே.
புற்றில்வாழும்அர வம்மரையார்த்தவன் மேவும்புக லூரைக்
கற்றுநல்லவவர் காழியுள்ஞானசம் பந்தன்தமிழ் மாலை
பற்றியென்றுமிசை பாடியமாந்தர் பரமன்னடி சேர்ந்து
குற்றமின்றிக்குறை பாடொழியாப்புக ழோங்கிப்பொலி வாரே.
திருச்சிற்றம்பலம்

April 3, 2012

மாணிக்க வாசகர் அருளிய திருவாசகம் 


சிவபுராணம்

திருச்சிற்றம்பலம்


நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க
5

வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க
10

ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி
15 

ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான்.
20

கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,
எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன்
25

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
30

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே
35

வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே
40

ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே
45

கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை
50

மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய,
55

விலங்கு மனத்தால், விமலா உனக்கு
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
60

தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரானே
பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப்
65

பேராது நின்ற பெருங்கருணைப் போராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே
70

அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில்
75

நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய்
80

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று
85

போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே
90

அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து.
95திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்த சுவாமிகள்


திருச்சிற்றம்பலம்

தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்த அருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.
முற்றலாமையிள நாகமோடேன முளைக்கொம் பவைபூண்டு
வற்றலோடுகலனாப் பலிதேர்ந்தென துள்ளங் கவர்கள்வன்
கற்றல்கேட்டலுடை யார்பெரியார்கழல் கையால் தொழுதேத்தப்
பெற்றமூர்ந்தபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.
நீர்பரந்தநிமிர் புன்சடைமேலோர் நிலாவெண் மதிசூடி
ஏர்பரந்தஇன வெள்வளைசோரஎன் னுள்ளங்கவர் கள்வன்
ஊர்பரந்தவுல கின்முதலாகிய வோரூரிது வென்னப்
பேர்பரந்தபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.
விண்மகிழ்ந்தமதி லெய்ததுமன்றி விளங்குதலை யோட்டில்
உண்மகிழ்ந்துபலி தேரியவந்தென துள்ளங்கவர் கள்வன்
மண்மகிழ்ந்தஅரவம் மலர்க்கொன்றை மலிந்தவரை மார்பிற்
பெண்மகிழ்ந்தபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.
ஒருமைபெண்மையுடை யன்சடையன்விடை யூருமிவ னென்ன
அருமையாகவுரை செய்யவமர்ந்தென துள்ளங்கவர் கள்வன்
கருமைபெற்றகடல் கொள்ளமிதந்ததோர் காலமிது வென்னப்
பெருமைபெற்றபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.
மறைகலந்தவொலி பாடலொடாடல ராகிமழு வேந்தி
இறைகலந்தவின வெள்வளைசோரவென் னுள்ளங்கவர் கள்வன்
கறைகலந்தகடி யார்பொழில்நீடுயர் சோலைக்கதிர் சிந்தப்
பிறைகலந்தபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.
சடைமுயங்குபுன லன்அனலன்எரி வீசிச்சதிர் வெய்த
உடைமுயங்கும் அரவோடுழிதந்தென துள்ளங்கவர் கள்வன்
கடல்முயங்குகழி சூழ்குளிர்கானலம் பொன்னஞ்சிற கன்னம்
பெடைமுயங்குபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.
வியரிலங்குவரை யுந்தியதோள்களை வீரம்விளை வித்த
உயரிலங்கையரை யன்வலிசெற்றென துள்ளங்கவர் கள்வன்
துயரிலங்குமுல கில்பலவூழிகள் தோன்றும்பொழு தெல்லாம்
பெயரிலங்குபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.
தாணுதல்செய்திறை காணியமாலொடு தண்டாமரை யானும்
நீணுதல்செய்தொழி யந்நிமிர்ந்தானென துள்ளங்கவர் கள்வன்
வாணுதல்செய்மக ளிர்முதலாகிய வையத்தவ ரேத்தப்
பேணுதல்செய்பிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.
புத்தரோடுபொறி யில்சமணும்புறங் கூறநெறி நில்லா
ஒத்தசொல்லவுல கம்பலிதேர்ந்தென துள்ளங்கவர் கள்வன்
மத்தயானைமறு கவ்வுரிபோர்த்ததோர் மாயமிது வென்னப்
பித்தர்போலும்பிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.
அருநெறியமறை வல்லமுனியகன் பொய்கையலர் மேய
பெருநெறியபிர மாபுரமேவிய பெம்மானிவன் றன்னை
ஒருநெறியமனம் வைத்துணர்ஞானசம் பந்தன்னுரை செய்த
திருநெறியதமிழ் வல்லவர்தொல்வினை தீர்த லெளிதாமே.
திருச்சிற்றம்பலம்

காரைக்கால் அம்மையார்


திருஆலங்காட்டு மூத்த திருப்பதிகம்-1


கொங்கை திரங்கி நரம்பெழுந்து குண்டுகண் வெண்பற் குழிவயிற்றுப்
பங்கி சிவந்திரு பற்கள்நீண்டு பரடுயர் நீள்கணைக் காலோர்பெண்பேய்
தங்கி அலறி உலறுகாட்டில் தாழ்சடை எட்டுத் திசையும்வீசி
அங்கங் குளிர்ந்தனல் ஆடும்எங்கள் அப்பன் இடந்திரு ஆலங்காடே
1


கள்ளிக் கவட்டிடைக் காலைநீட்டிக் கடைக்கொள்ளி வாங்கி மசித்துமையை
விள்ள எழுதி வெடுவெடென்ன நக்கு வெருண்டு விலங்குபார்த்துத்
துள்ளிச் சுடலைச் சுடுபிணத்தீச் சுட்டிட முற்றுஞ் சுளிந்துபூழ்தி
அள்ளி அவிக்கநின் றாடும்எங்கள் அப்பன் இடந்திரு ஆலங்காடே
2


வாகை விரிந்துவெண் ணெற்றொலிப்ப மயங்கிருள் கூர்நடு நாளையாங்கே
கூகையொ டாண்டலை பாடஆந்தை கோடதன் மேற்குதித் தோடவீசி
ஈகை படர்தொடர் கள்ளிநீழல் ஈமம் இடுசுடு காட்டகத்தே
ஆகங் குளிர்ந்தனல் ஆடும் எங்கள் அப்பன் இடந்திரு ஆலங்காடே
3


குண்டிலோ மக்குழிச் சோற்றைவாங்கிக் குறுநரி தின்ன அதனைமுன்னே
கண்டிலோம் என்று கனன்றுபேய்கள் கையடித் தோடிடு காடரங்கா
மண்டலம் நின்றங் குளாளம்இட்டு வாதித்து வீசி எடுத்தபாதம்
அண்டம் உறநிமிர்ந் தாடும்எங்கள் அப்பன் இடந்திரு ஆலங்காடே
4


விழுது நிணத்தை விழுங்கியிட்டு வெண்தலை மாலை விரவப்பூட்டிக்
கழுதுதன் பிள்ளையைக் காளியென்று பேரிட்டுச் சீருடைத் தாவளர்த்துப்
புழுதி துடைத்து முலைகொடுத்துப் போயின தாயை வரவுகாணா
தழுதுறங் கும்புறங் காட்டில்ஆடும் அப்பன் இடந்திரு ஆலங்காடே
5


பட்டடி நெட்டுகிர்ப் பாறுகாற்பேய் பருந்தொடு கூகை பகண்டைஆந்தை
குட்டி யிடமுட்டை கூகைபேய்கள் குறுநரி சென்றணங் காடுகாட்டில்
பிட்டடித் துப்புறங் காட்டில்இட்ட பிணத்தினைப் பேரப் புரட்டிஆங்கே
அட்டமே பாயநின் றாடும்எங்கள் அப்பன் இடந்திரு ஆலங்காடே
6


சுழலும் அழல்விழிக் கொள்ளிவாய்ப்பேய் சூழ்ந்து துணங்கையிட் டோடிஆடித்
தழலுள் எரியும் பிணத்தைவாங்கித் தான்தடி தின்றணங் காடுகாட்டிற்
கழல்ஒலி ஓசைச் சிலம்பொலிப்பக் காலுயர் வட்டணை இட்டுநட்டம்
அழல்உமிழ்ந் தோரி கதிக்கஆடும் அப்பன் இடந்திரு ஆலங்காடே
7


நாடும் நகரும் திரிந்துசென்று நன்னெறி நாடி நயந்தவரை
மூடி முதுபிணத் திட்டமாடே முன்னிய பேய்க்கணம் சூழச்சூழக்
காடுங் கடலும் மலையும் மண்ணும் விண்ணுஞ் சுழல அனல்கையேந்தி
ஆடும் அரவப் புயங்கன்எங்கள் அப்பன் இடந்திரு ஆலங்காடே
8


துத்தங் கைக்கிள்ளை விளரிதாரம் உழைஇளி ஓசைபண் கெழுமப்பாடிச்
சச்சரி கொக்கரை தக்கையோடு தகுணிதம் துந்துபி தாளம்வீணை
மத்தளங் கரடிகை வன்கைமென்றோல் தமருகங் குடமுழா மொந்தை வாசித்
தத்தனை விரவினோ டாடும்எங்கள் அப்பன் இடந்திரு ஆலங்காடே
9


புந்தி கலங்கி மதிமயங்கி இறந்தவ ரைப்புறங் காட்டில்இட்டுச்
சந்தியில் வைத்துக் கடமைசெய்து தக்கவர் இட்டசெந் தீவிளக்கா
முந்தி அமரர் முழவின்ஓசை திசைகது வச்சிலம் பார்க்கஆர்க்க
அந்தியில் மாநடம் ஆடும்எங்கள் அப்பன் இடந்திரு ஆலங்காடே
10


ஒப்பினை இல்லவன் பேய்கள்கூடி ஒன்றினை ஒன்றடித் தொக்கலித்துப்
பப்பினை யிட்டுப் பகண்டை யாடப் பாடிருந் தந்நரி யாழ்அமைப்ப
அப்பனை அணிதிரு ஆலங்காட்டுள் அடிகளைச் செடிதலைக் காரைக்காற்பேய்
செப்பிய செந்தமிழ் பத்தும்வல்லார் சிவகதி சேர்ந்தின்பம் எய்துவாரே
11திருச்சிற்றம்பலம்


April 2, 2012

திருவாசகம் பாடல் - 144


பழிப்புஇல் நின் பாதம் பழம்தொழும்பு
எய்தி விழப் பழித்து
விழித்து இருந்தேனை விடுதி கண்டாய்!
வெண் மணிப் பணிலம்
கொழித்து மந்தாரம் மந்தாகினி
நுந்தும் பந்தப் பெருமை 
தழிச்சிறை நீரில் பிறைக்கலம்
சேர்தரு தாரவனே!

பொருள்: சிவபெருமானே! முத்து, சங்கு, மந்தாரமலர் ஆகியவற்றை அடித்துக் கொண்டு, கங்கை நதி  வருகின்றது. அக்கங்கை நீரைத் தேக்கி வைக்கும் அணைபோல, உன் 
ஜடாமுடி இருக்கின்றது. அந்த அணையில் மிதக்கும் படகு போல இளம்பிறை விளங்குகின்றது. வெற்றி மாலையை அணிந்தவரே! குற்றமற்ற உன் திருவடிகளை வழி
வழியாக பின்பற்றும் முறைப்படி பணிந்து போற்றினேன். பாதியில் அப்படியே மறந்துவிட்டு பழித்துரைக்கத் தொடங்கி, விழித்துக் கொண்டு நிற்கின்றேன். அப்படிப்பட்ட அற்பன் தான் நான்! இருப்பினும், என்னை அப்படியே விட்டுவிட்டாயே!

கொய்யணி நறுமலர்க் கொன்றை யந்தார்
மையணி மிடறுடை மறையவனூர்
பையணி அரவொடு மான்மழுவாள்
கையணி பவனிடம் கடைமுடியே.


பொருள்: புதிதாய் கொய்யப்பட்ட நறுமணம் மிக்க கொன்றை மலர்களால் ஆன மாலையணிந்தவனே! கழுத்தில் விஷத்தை அடக்கியதால் நீலநிறமான கழுத்தினை உடையவனே! வேதங்களால் புகழப்படுபவனே! படம் கொண்ட பாம்பினையும், மான், மழு (கோடரி) ஆகிய ஆயுதங்களையும் கொண்ட சிவனே! நீ "திருக்கடைமுடி' என்னும் தலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் செய்கிறாய்

சிதம்பரம் நடராஜர் மீது திருநாவுக்கரசர் பாடிய பதிகம் 

அரியானை அந்தணர் தம் சிந்தையானை
அருமறையின் அகத்தானை அணுவையார்க்கும்
தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத்
திகழொளியைத் தேவர்கள் தங்கோனை மற்றைக்
கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக்
கனைக்கடலைக் குலவரையைக் கலந்து நின்ற
பெரியானைப் பெரும்பற்றப் புலியூரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

கற்றானைக் கங்கைவார் சடையான் தன்னைக்
காவிரிசூழ் வலஞ்சுழியும் கருதினானை
அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள்செய்வானை
ஆரூரும் புகுவானை அறிந்தோ மன்றே!
மற்றாரும் தன்னொப்பார் இல்லா தானை
வானவர்கள் எப்பொழுதும் வணங்கி ஏத்தப்
பெற்றானை பெரும்பற்றப் புலியூரானைப் 
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

கருமானின் உரியதளே உடையா வீக்கிக்
கனைகழல்கள் கலந்தொலிப்ப அனல்கை ஏந்தி
வருமானத் திரள்தோள்கள் மட்டித் தாட
வளர்மதியம் சடைக்கணிந்து மானேர் நோக்கி
அருமான வாண்முகத்தாள் அமர்ந்து காண 
அமரர்கணம் முடிவணங்க ஆடு கின்ற
பெருமானைப் பெரும்பற்றப் புலியூரானைப் 
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

அருந்தவர்களே தொழுதேத்தும் அப்பன் தன்னை
அமரர்கள்தம் பெருமானை அரனை மூவா
மருந்து அமரர்க்கு அருள்புரிந்த மைந்தன் தன்னை
மறிகடலும் குலவரையும் மண்ணும் விண்ணும்
திருந்தொளிய தாரகையும் திசைகள் எட்டும்
திரிசுடர்கள் ஓரிரண்டும் பிறவும் மாய
பெருந்தகையைப் பெரும்பற்றப் புலியூரானைப் 
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

அருந்துணையை அடியார்தம் அல்லல் தீர்க்கும்
அருமருந்தை அகன்ஞாலத்து அகத்துள் தோன்றி
வருந்துணையும் சுற்றமும் பற்றும்விட்டு
வான்புலன்கள் அகத்தடக்கி மடவாரோடும்
பொருந்தணைமேல் வரும்பயனைப் போகமாற்றிப்
பொதுநீக்கித் தனைநினைய வல்லோர்க் கென்றும்
பெருந்துணையைப் பெரும்பற்றப் புலியூரானைப் 
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

கரும்பமரும் மொழிமடவாள் பங்கன் தன்னைக்
கனவயிரக் குன்றனைய காட்சி யானை
அரும்பமரும் பூங்கொன்றைத் தாரான் தன்னை
அருமறையோடு ஆறங்கம் ஆயினானைச்
சுரும்பமருங் கடிபொழில்கள் சூழ்தென் னாரூர்ச்
சுடர்க்கொழுந்தைத் துளக்கில்லா விளக்கை மிக்க
பெரும்பொருளைப் பெரும்பற்றப் புலியூரானைப் 
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

வரும்பயனை எழுநரம்பின் ஓசையானை
வரைசிலையா வானவர்கள் முயன்ற வாளி
அரும்பயம் செய் அவுணர் புரமெரியக் கோத்த 
அம்மானை அலைகடல் நஞ்சயின்றான் தன்னைச் 
சுரும்ப மருங்குழல் மடவார் கடைக்கண்நோக்கில்
துளங்காத சிந்தையராய்த் துறந்தோர் உள்ளப்
பெரும்பயனைப் பெரும்பற்றப் புலியூரானைப் 
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

காரானை யீருரிவைப் போர்வை யானைக் 
காமருபூங் கச்சியே கம்பன் தன்னை 
ஆரேனும் அடியவர்கட்கு அணியான் தன்னை
அமரர்களுக்கு அறிவரிய அளவிலானைப் 
பாரோரும் விண்ணோரும் பணிய நட்டம்
பயில்கின்ற பரஞ்சுடரைப் பரனை எண்ணில்
பேரானைப் பெரும்பற்றப் புலியூரானைப் 
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

முற்றாத பால்மதியம் சூடி னானை
மூவுலகும் தானாய முதல்வன் தன்னைத்
செற்றார்கள் புரமூன்றும் செற்றான் தன்னைத் 
திகழொளியை மரகதத்தைத் தேனைப் பாலைக்குற்ற
குற்றாலத் தமர்ந்துறையும் குழகன் தன்னைக்
கூத்தாட வல்லானைக் கோளை ஞானம்பெற்றா
பெற்றானைப் பெரும்பற்றப் புலியூரானைப் 
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

காரொளிய திருமேனிச் செங்கண் மாலும்
கடிக்கமலத் திருந்தவனும் காணா வண்ணம்
சீரொளிய தழற்பிழம்பாய் நின்ற தொல்லைத்
திகழொளியைச் சிந்தைதன்னை மயக்கம் தீர்க்கும்
ஏரொளியை இருநிலனும் விசும்பும் விண்ணும்
ஏழுலகும் கடந்தண்டத்து அப்பால் நின்ற
பேரொளியைப் பெரும்பற்றப் புலியூரானைப் 
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.