February 8, 2012

திருடுபோன பொருட்கள் திரும்ப கிடைக்க உதவும் பதிகம்




சுந்தர மூர்த்தி சாமிகள் சேரமான் பெருமான் நாயனாருடன் பல தலங்களை வழி பட்டு ,திரூவாரூர் புறப்பட்டு வருகிறார்,சேரமான் பல பரிசுகளை ஏவலாள் தலையில் ஏற்றி அனுப்புகிறார்,,,
திருமுருகன் பூண்டிக்கு அருகில் சிவபெருமான் பூத கணங்களை வேடர்களாக்கி அவற்றை கவர்ந்து வர செய்கிறார்,,,,
சுந்தர மூர்த்தி சாமிகள் பூண்டி ஆலயத்துள் சென்று இப்பதிகம் பாட,,எல்லாப் பொருளையும் சிவபெருமான் திருப்பி அளிக்கிறார்,,,,

    

திருச்சிற்றம்பலம்

திருமுருகன்பூண்டி
பண்-பழம்பஞ்சாரம்.

கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர்
விரவலாமை சொல்லித்
திடுகு மொட்டெனக் குத்திக் கூறைகொண்டு
ஆறலைக்குமிடம் 
முடுகு நாறிய வடுகர் வாழ் முருகன் 
பூண்டி மாநகர்வாய்
இடுகு நுண்ணிடை மங்கை தன்னோடும் 
எத்துக்கிங் கிருந்தீர் எம்பிரானீரே

வில்லைக் காட்டிவெருட்டி வேடுவர்
விரவலாமை சொல்லிக்
கல்லினால் எறிந்திட்டும் மோதியுங்
கூறை கொள்ளுமிடம் 
முல்லைத்தாது மணங்கமழ் முருகன் 
பூண்டி மாநகர் வாய் 
எல்லைக் காப்பதொன் றில்லையாகில் நீர்
எத்துக்கிங் கிருந்தீர் எம்பிராநீரே

பசுக்களே கொன்று தின்று பாவிகள்
பாவம் ஒன்றறியார் 
உசிர்க் கொலை பல நேர்ந்து நாள் தொறும்
கூறை கொள்ளுமிடம் 
முசுக்கள் போற்பல வேடர் வாழ் முருகன் 
பூண்டி மாநகர் வாய் 
இசுக்கழியப் பயிக்கங் கொண்டு நீர் 
எத்துக்கிங் கிருந்தீர் எம்பிரானீரே

பீறற்கூறை உடுத்தொர் பத்திரங்
கட்டி வெட்டினராய்ச்
சூறைப்பங்கிய ராகி நாள்தொறுங் 
கூறை கொள்ளுமிடம் 
மோறை வேடுவர் கூடி வாழ் முருகன் 
பூண்டி மாநகர் வாய் 
ஏறு கால் இற்ற தில்லையாய் விடில் 
எத்துக்கிங்கிருந்தீர் எம்பிரானீரே

தயங்கு தோலை உடுத்து சங்கர
சாம வேத மோதி 
மயங்கி ஊரிடு பிச்சை கொண்டுனும் 
மார்க்க மொன்றறியீர்
முயங்கு பூண்முலை மங்கையாளொடு
முருகன் பூண்டி மாநகர் வாய் 
இயங்கவும் மிடுக்குடயராய் விடில்
எத்துக்கிங்கிருந்தீர் எம்பிரானீரெ    

விட்டிசைப்பன கொக்கரை கொடு 
கொட்டி தத்தளகம் 
கொட்டிப் பாடுமிந் துந்துமியொடு
குடமுழா நீர் மகிழ்வீர்
மொட்டலர்ந்து மணங் கமழ் முருகன்
பூண்டி மாநகர் வாய்
இட்ட பிச்சை கொண்டுண்ப தாகில்நீர்
எத்துக்கிங்கிருந்தீர் எம்பிரானீரே

வேதமோதி வெண்ணீறு பூசி வெண்
கோவணந் தற்றயலே
ஓதமேவிய ஒற்றியூரையும்
முத்தி நீர் மகிழ்வீர் 
மோதி வேடுவர் கூறை கொள்ளு முருகன்
பூண்டி மாநகர் வாய் 
ஏதுகாரணம் ஏதுகாவல் கொண்டு 
எத்துக்கிங்கிருந்தீர் எம்பிரானீரே

படவரவு நுண்ணேரிடைப் பணைத்
தோள் வரி நெடுங்கண்
மடவரல் உமை நங்கை தன்னையோர்
பாகம் வைத்துகந்தீர் 
முடவரல்லீர் இடரிலீர் முருகன் 
பூண்டி மாநகர்வாய் 
இடவமேறியும் போவதாகில் நீர்
எத்துக்கிங்கிருந்தீர் எம்பிரானீரே

சாந்தமாக வெண் நீறுபூசிவெண்
பல்தலை கலனா
வேய்ந்த வெண்பிறை கண்ணி தன்னையோர்
பாகம் வைத்துகந்தீர் 
மோந்தையொடு முழக்கறா முருகன் 
பூண்டி மாநகர் வாய் 
ஏந்து பூண்முலை மங்கை தன்னோடும்
எத்துக்கிங்கிருந்தீர் எம்பிரானீரே

முந்தி வானவர் தாந்தொழும் முருகன் 
பூண்டி மாநகர் வாய் 
பந்தணை விரற் பாவை தன்னையோர்
பாகம் வைத்தவனைச்
சிந்தையிற்சிவ தொண்டனூரன் 
உரைத்தன பத்துங் கொண்(டு)
எந்தம் அடிகளை ஏத்துவார் இட
ரொன் றுந்தாமி லரே

திருச்சிற்றம்பலம்   












February 7, 2012

பிறவிப் பயனைக் கொடுக்கும் பதிகம்


திருச்சிற்றம்பலம்

பண்--சாதாரி

தலையே நீ வணங்காய் -தலைமாலை தலைக்கணிந்து
தலையாலே பலி தேருந் தலைவனைத் தலையே நீ வணங்காய்

கண்காள் காண்மின்களோ-கடல் நஞ்சுண்ட கண்டன் தண்னை
எண்தோள் வீசிநின்றாடும் பிரான்தன்னைக் கண்காள் காண்மின்களோ

செவிகாள் கேண்மின்களோ-சிவன் எம்மிறை செம்பவள
எரிபோல் மேனிப்பிரான் திறம் எப்போதுஞ் செவிகாள் கேண்மின்களோ 

மூக்கே நீ முரலாய்-முதுகாடுறை முக்கணனை 
வாக்கே நோக்கிய மங்கை மணாளணை மூக்கே நீ முரலாய்

வாயே வாழ்த்து கண்டாய்-மதயானை உரிபோர்த்துப்
பேய்வாழ் காட்டகத்தாடும் பிரான் தன்னை வாயே வாழ்த்து கண்டாய்


நெஞ்சே நீ நினையாய்-நிமிர் புன்சடை நின்மலனை
மஞ்சாடும் மலை மங்கை மணாளனை நெஞ்சே நீ நினையாய்

கைகாள் கூப்பித்தொழீர்-கடிமாமலர் தூவி நின்று 
பைவாய்ப் பாம்பரை ஆர்த்த பரமனை கைகாள் கூப்பித்தொழீர்

ஆக்கை யாற்பயனென்-அரன் கோயில் வலம் வந்து 
பூக்கை யால் அட்டிப் போற்றி என்னாத இவ் ஆக்கையாற்பயனென்

கால்களாற்பயனென் -கறைக் கண்டன் உறை கோயில்
கோலக் கோபுரக் கோகர ணஞ்சூழாக் கால்களாற்பயனென் 

உற்றார் ஆருளரோ-உயிர் கொண்டு போகும்பொழுது 
குற்றாலத்துறை கூத்தன் அல்லால் நமக்குற்றார் ஆருளரோ

இறுமாந்திருப்பன் கொலோ -ஈசன் பல்கணத்தெண்ணப்பட்டுச்
சிறுமானேந்திதன் சேவடிக் கீழ்ச் சென்றங்கு இறுமாந்திருப்பன் கொலோ,

தேடிக் கண்டு கொண்டேன் -திரு மாலொடு நான்முகனும்
தேடித் தேடொணாத் தேவனை என்னுளே தேடிக்கண்டுகொண்டேன்..

திருச்சிற்றம்பலம்





  

February 5, 2012

வழக்குகளில் வெற்றிபெறவும்,,வியாபாரத்தில் நல்ல வருவாய் வரவும் ஓத வேண்டிய பதிகம்,,,,


திருவீழிமிழலை 
பண்-குறிஞ்சி 

                                    திருச்சிற்றம்பலம் 

வாசி தீரவே காசு நல்குவீர் 
மாசில் மிழலையீர் ஏசல் இல்லையே 

இறைவர் ஆயினீர் மறைகொள் மிழலையீர் 
கறைகொள் காசினை முறைமை நல்குமே 

செய்ய மேனியீர் மெய்கொள் மிழலையீர் 
பைகொள் அரவினீர் உய்ய நல்குமே 

நீறுபூசினீர் ஏறதேறினீர் 
கூறுமிழலையீர் பேறும் அருளுமே 

காமன்வேவஓர் தூமக்கண்ணினீர்
நாம மிழலையீர் சேம நல்குமே 

பிணிகொள் சடையினீர் மணிகொள்மிடறினீர்
அணிகொள் மிழலையீர் பணிகொண்டருளுமே

மங்கை பங்கினீர் துங்க மிழலையீர் 
கங்கை முடியினீர் சங்கை தவிர்மினே 

அரக்கன் நெரிதர இரக்கம் எய்தினீர்
பரக்கு மிழலையீர் கரக்கை தவிர்மினே 

அயனு மாலுமாய் முயலு முடியினீர் 
இயலு மிழலையீர் பயனும் அருளுமே 

பறிகொள் தலையினார் அறிவதறிகிலார்
வெறிகொள் மிழலையீர் பிறிவ தரியதே

காழி மாநகர் வாழி சம்பந்தன் 
வீலிமிழலைமேல் தாழும் மொழிகளே 

                                     திருச்சிற்றம்பலம்

     

February 4, 2012

இடர்களையும் பதிகம்

இப்பதிகத்தை ஓதுவதால் இறையருள் கைகூடும் ,,,,,
இறையருள் ஒன்றிருந்தால் நம் அனைவர் இல்லங்களிலும் அமைதியும் ,,மங்களமும் உண்டாகும்,,,,






                                                  திருச்சிற்றம்பலம் 
திருநெடுங்களம் 
பண்--பழந்தக்கராகம் 

மறையுடையாய் தோலுடையாய் வார்சடை மேல் வளரும் 
பிறையுடையாய் பிஞ்ஞகனே என்றுனைப் பேசினல்லால் 
குறையுடையார் குற்றம் ஓராய்  கொள்கையினால் உயர்ந்த 
நிறையுடையார் இடர் களையாய்  நெடுங்கள மேயவனே,,,,

கனைத்தெழுந்த வெண்டிரை சூழ் கடலிடை நஞ்சு தன்னை 
தினைத்தனையா மிடற்றில் வைத்த திருந்திய தேவ நின்னை 
மனத்தகத்தோர் பாடல் ஆடல் பேணியிராப் பகலும்
நினைத்தெழுவார் இடர் களையாய் நெடுங்கள மேயவனே ,,,,

நின்னடியே வழிபடுவான் நிமலா நினைக் கருத 
என்னடியான் உயிரை வவ்வேல் என்றடட் கூற்றுதைத்த 
பொன்னடியே பரவி நாளும் பூவொடு நீர் சுமக்கும்
நின்னடியார் இடர் களையாய் நெடுங்கள மேயவனே,,,,

மலைபுரிந்த மன்னவன்றன் மகளையோர்பால் மகிழ்ந்தாய் 
அழல் புரிந்த கங்கை தங்கும் அவிர் சடை யாரூரா 
தலைபுரிந்த பலி மகிழ்வாய் தலைவநின் தாள் நிழற்கீழ்
நிலைபுரிந்தார் இடர் களையாய் நெடுங்கள மேயவனே,,,,

பாங்கினல்லார் படிமஞ்செய்வார் பாரிடமும் பலிசேர்
தூங்கிநல்லார் பாடலோடு தொழு கழலே வணங்கித் 
தங்கி நில்லா அன்பினோடுந் தலைவ நின் தாள் நிழல்கீழ் 
நீங்கி நில்லார் இடர் களையாய் நெடுங்கள மேயவனே,,,,,,

விருத்தனாகிப் பாலனாகி வேதமோர் நான்குணர்ந்து
கருத்தனாகிக் கங்கையாளைக் கமழ்சடை மேல் கரந்தாய்
அருத்தனாய ஆதிதேவன் அடியிணையே பரவும் 
நிருத்தர் கீதர் இடர் களையாய் நெடுங்கள மேயவனே,,,,,,

கூறுகொண்டாய் மூன்றுமொன்றாக் கூட்டியோர் வெங்கணையால்
மாறுகொண்டார் புரமெரித்த மன்னவனே கொடிமேல்
ஏறுகொண்டாய் சாந்தமீதென்று எம்பெருமான் அணிந்த 
நீறு கொண்டார் இடர் களையாய் நெடுங்கள மேயவனே,,,

குன்றின் உச்சி மேல் விளங்கும் கொடி மதில் சூழ் இலங்கை 
அன்றி நின்ற அரக்கர் கோனை அருவரைக் கீழ் அடர்த்தாய்
என்று நல்ல வாய் மொழியால் ஏத்தி யிராப்பகலும்
நின்று நைவார் இடர் களையாய் நெடுங்கள மேயவனே,,,,,,,

வேழ வெண் கொம் பொசித்தமாலும் விளங்கிய நான்முகனும் 
சூழவெங்கும் நேட ஆங்கோர் சோதி உளாகி    நின்றாய்
கேழல் வெண் கொம்பணிந்த பெம்மான் கேடிலாப் பொன்னடியின்
நீழல் வாழ்வார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே,,,

வெஞ்சொல் தஞ்சொல் லாக்கி நின்ற வேடமில்லாச் சமணும்
தஞ்சமில்லாச் சாக்கியருந் தத்துவ மொன்றறியார் 
துஞ்சலில்லா வாய் மொழியால் தோத்திர நின்னடியே 
நெஞ்சில் வைப்பார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே,,,

நீட வல்ல வார் சடையான் மேய நெடுங்களத்தைச்
சேடர் வாழும் மா மருகிட் சிரபுரக்கோன் நலத்தால்
நாடவல்ல பனுவன் மாலை ஞானசம்பந்தன் சொன்ன
பாடல் பத்தும் பாட வல்லார் பாவம் பறையுமே,,,

                                        திருச்சிற்றம்பலம்








      
  



  

நால்வர் துதி



பூழியர் கோன் வெப்பொழித்த புகலியர் கோன் கழல் போற்றி 
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்தபிரான் அடி போற்றி 
வாழி திருநாவலூர் வன் தொண்டர் பதம் போற்றி 
ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி,,,,,    

விநாயகர் துதி

திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல் 
பெருவாக்கும் பீடும் பெருக்கும்--உருவாக்கும் 
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக் 
காதலால் கூப்புவர் தங் கை..