February 8, 2012

திருடுபோன பொருட்கள் திரும்ப கிடைக்க உதவும் பதிகம்




சுந்தர மூர்த்தி சாமிகள் சேரமான் பெருமான் நாயனாருடன் பல தலங்களை வழி பட்டு ,திரூவாரூர் புறப்பட்டு வருகிறார்,சேரமான் பல பரிசுகளை ஏவலாள் தலையில் ஏற்றி அனுப்புகிறார்,,,
திருமுருகன் பூண்டிக்கு அருகில் சிவபெருமான் பூத கணங்களை வேடர்களாக்கி அவற்றை கவர்ந்து வர செய்கிறார்,,,,
சுந்தர மூர்த்தி சாமிகள் பூண்டி ஆலயத்துள் சென்று இப்பதிகம் பாட,,எல்லாப் பொருளையும் சிவபெருமான் திருப்பி அளிக்கிறார்,,,,

    

திருச்சிற்றம்பலம்

திருமுருகன்பூண்டி
பண்-பழம்பஞ்சாரம்.

கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர்
விரவலாமை சொல்லித்
திடுகு மொட்டெனக் குத்திக் கூறைகொண்டு
ஆறலைக்குமிடம் 
முடுகு நாறிய வடுகர் வாழ் முருகன் 
பூண்டி மாநகர்வாய்
இடுகு நுண்ணிடை மங்கை தன்னோடும் 
எத்துக்கிங் கிருந்தீர் எம்பிரானீரே

வில்லைக் காட்டிவெருட்டி வேடுவர்
விரவலாமை சொல்லிக்
கல்லினால் எறிந்திட்டும் மோதியுங்
கூறை கொள்ளுமிடம் 
முல்லைத்தாது மணங்கமழ் முருகன் 
பூண்டி மாநகர் வாய் 
எல்லைக் காப்பதொன் றில்லையாகில் நீர்
எத்துக்கிங் கிருந்தீர் எம்பிராநீரே

பசுக்களே கொன்று தின்று பாவிகள்
பாவம் ஒன்றறியார் 
உசிர்க் கொலை பல நேர்ந்து நாள் தொறும்
கூறை கொள்ளுமிடம் 
முசுக்கள் போற்பல வேடர் வாழ் முருகன் 
பூண்டி மாநகர் வாய் 
இசுக்கழியப் பயிக்கங் கொண்டு நீர் 
எத்துக்கிங் கிருந்தீர் எம்பிரானீரே

பீறற்கூறை உடுத்தொர் பத்திரங்
கட்டி வெட்டினராய்ச்
சூறைப்பங்கிய ராகி நாள்தொறுங் 
கூறை கொள்ளுமிடம் 
மோறை வேடுவர் கூடி வாழ் முருகன் 
பூண்டி மாநகர் வாய் 
ஏறு கால் இற்ற தில்லையாய் விடில் 
எத்துக்கிங்கிருந்தீர் எம்பிரானீரே

தயங்கு தோலை உடுத்து சங்கர
சாம வேத மோதி 
மயங்கி ஊரிடு பிச்சை கொண்டுனும் 
மார்க்க மொன்றறியீர்
முயங்கு பூண்முலை மங்கையாளொடு
முருகன் பூண்டி மாநகர் வாய் 
இயங்கவும் மிடுக்குடயராய் விடில்
எத்துக்கிங்கிருந்தீர் எம்பிரானீரெ    

விட்டிசைப்பன கொக்கரை கொடு 
கொட்டி தத்தளகம் 
கொட்டிப் பாடுமிந் துந்துமியொடு
குடமுழா நீர் மகிழ்வீர்
மொட்டலர்ந்து மணங் கமழ் முருகன்
பூண்டி மாநகர் வாய்
இட்ட பிச்சை கொண்டுண்ப தாகில்நீர்
எத்துக்கிங்கிருந்தீர் எம்பிரானீரே

வேதமோதி வெண்ணீறு பூசி வெண்
கோவணந் தற்றயலே
ஓதமேவிய ஒற்றியூரையும்
முத்தி நீர் மகிழ்வீர் 
மோதி வேடுவர் கூறை கொள்ளு முருகன்
பூண்டி மாநகர் வாய் 
ஏதுகாரணம் ஏதுகாவல் கொண்டு 
எத்துக்கிங்கிருந்தீர் எம்பிரானீரே

படவரவு நுண்ணேரிடைப் பணைத்
தோள் வரி நெடுங்கண்
மடவரல் உமை நங்கை தன்னையோர்
பாகம் வைத்துகந்தீர் 
முடவரல்லீர் இடரிலீர் முருகன் 
பூண்டி மாநகர்வாய் 
இடவமேறியும் போவதாகில் நீர்
எத்துக்கிங்கிருந்தீர் எம்பிரானீரே

சாந்தமாக வெண் நீறுபூசிவெண்
பல்தலை கலனா
வேய்ந்த வெண்பிறை கண்ணி தன்னையோர்
பாகம் வைத்துகந்தீர் 
மோந்தையொடு முழக்கறா முருகன் 
பூண்டி மாநகர் வாய் 
ஏந்து பூண்முலை மங்கை தன்னோடும்
எத்துக்கிங்கிருந்தீர் எம்பிரானீரே

முந்தி வானவர் தாந்தொழும் முருகன் 
பூண்டி மாநகர் வாய் 
பந்தணை விரற் பாவை தன்னையோர்
பாகம் வைத்தவனைச்
சிந்தையிற்சிவ தொண்டனூரன் 
உரைத்தன பத்துங் கொண்(டு)
எந்தம் அடிகளை ஏத்துவார் இட
ரொன் றுந்தாமி லரே

திருச்சிற்றம்பலம்   












1 comment:

இராஜராஜேஸ்வரி said...

பயன் மிக்க பதிகப் பகிர்வுக்கு பாராட்டுக்கள்..